Thursday, September 6, 2012

சர்வாதிகாரியா?(சிறுகதை)

அந்த வீடு பூட்டி இருந்தது . .மூன்று தரம் வாசற் கதவு பெல் அடித்தும் நாலுதரம் தட்டி பார்த்தும் ஆறு தரமோ அதுக்கு மேலேயும் சத்தம் போட்டும் எந்த விதமான மறுமொழியும் காணமால் ..இப்ப கொஞ்சம் முந்தி தானே இறங்குகிறேன் அரை மணித்தியலாத்தில் வந்து விடுவேன்  என்று சொன்ன பொழுது ..வரவா ஸ்டேசனுக்கு என்று கேட்டானே என்ற கேள்வி குறியோடு மொபைலில் தொடர்பு கொள்ள முயற்சித்தான். எத்தனை தரம் முயன்றாலும்  திரும்ப திரும்ப ஒரே பதிலை சொல்லி கொண்டு இருந்தது.இப்ப என்ன செய்வம் என்று திரும்பி  பார்த்த பொழுது  தூரத்தில்  மலை பாங்காக தெரியும் பகுதியில் இவனை இறக்கி விட்டு சென்ற டாக்சி போய் கொண்டிருந்தது

சுற்ற வர மலை பாங்கான இடத்தின் அடியில் இருக்கும் அந்த ஆங்கில தேசத்தின் ஒரு கிராமம் அவன் நிற்கும் இடம்.மருந்துக்கு கூட மாநிறத்தினரையோ கறுத்த நிறத்தினரையோ காண கிடைப்பது கஸ்டம் என்று முன்னமே அறிந்திருந்தான் .என்றாலும் ஒரு நப்பாசை இருந்தது யாராவது தென்பட மாட்டார்களா என்று ,,மீண்டும் கொஞ்ச தூரம் நடந்து பார்த்தும் ஒருதரையும் காண கிடைக்கவில்லை.நடுநிசி என்றாலும் உறங்காத   ஒரு பர பரப்பான இரைச்சல் நிறைந்த லண்டன் நகரில் பல காலம் வாழ்க்கையை ஓட்டியவன் என்ற படியால். அங்கு தென்பட்ட  மயான அமைதியுடன்  இந்த சந்தர்ப்ப சூழ்நிலையும்  இணையும் பொழுது வாயுள் முணு முணுத்த சொற்கள்  அவனை அறியாமையாலே வெளியில் வார்த்தைகளாக விழுந்து சிதறின. ச்சீ  என்னண்டாப்பா. இவ்வளவு காலம் இதுக்குள்ளை வாழுகிறான் என்று மனம் ஒரு புறம் நினைத்து கொள்ள கால்கள் ஒரு புறம் நடந்து கொள்ள  லண்டன் இவ்வளவு தூரம் என்று சொல்லும் மைல் கல்லோடு ஒட்டிய படி    கண்ணில் மூலை கடை மாதிரி ஒன்று  தென்பட காதில் தமிழ் குரல்  போல ஒன்று விழுந்தது ...இப்ப வந்து போற நாயள் ஊத்தை வெள்ளையளாய் இருக்கோணுமென்று.

  கடையே தான்  அட நம்ம ஆளு  என்று கேள்வி குறியோடு பார்த்த பொழுது  அதே கேள்வி குறி அவரின்  முகத்திலும்.மருண்ட பார்வையுடன்  சிறிலங்காவோ என்று கேட்டு விட்டு  அவனின் பதிலை  எதிர்பாரமால்  தம்பி ஊருக்கு புதிசு போல ...ஒரு நாளும் இங்கினை காணவில்லை  யாரிட்டை வந்திருக்கிறியள் ஊர் காவலர் போல குறுக்கு விசாரணை செய்தார்.இப்படி அல்லாடும் சூழ்நிலையில் அவரின் சிநேகம் தேவைப்பட்டது. அண்ணை நான்   அந்த குறுக்கு தெரிவிலை இருக்கிற ராஜனிட்டை வந்தனான். நிற்கிறன் என்று சொன்னவன் ஆளை காணவில்லை அதோடை போனும் வேலை செய்யுதில்லை  என்ன செய்யிறது என்றும் தெரியவில்லை என்று கூறும் பொழுது பரிதாபமாக இருந்தது. ஆனால் அவரின் காதில் இவை பட்டு முகம் பயங்கரமாக மாறியது.

அவரிட்டியோ என்று தொடங்கி அவனிட்டையோ என்று சுருதி மாறியது . தம்பி சொல்லுறது என்று குறை நினைக்காதையுங்கோ என்று தொடங்கினவர் நிறுத்தி ,,என்ன வேணும் அவனுக்கு  .என்னவாயும் இருந்தாலும் பரவாயில்லை ,உவன் குடும்ப காரனாய் இருந்து கொண்டு கொஞ்சமும் ஒரு யோசனையும் இல்லாமால் கொஞ்சம் முந்தி எனக்கு இங்கை அலுப்பு கொடுத்திட்டு போன ஊத்தை வெள்ளையள் போல இருக்கிற ஆட்களோடை எல்லாம் சேர்ந்து ஒரே அட்டாகாசம் தம்பி ... நிறுத்தியவர் ....கதை சொல்ல வெளிகிட்டார்

இந்த ஊர் முழுக்க முழுக்க தூய வெள்ளையள் வாழுற இடம். தமிழ் குடும்பம் நாலு ஜந்து பேர் இருக்கிறம் ஒரு சோலி சுரட்டுக்கும்  போறதில்லை.அங்கங்கை அக்கம் பக்கத்திலை ஊரில் இருக்கிற ஊத்தை வெள்ளையள் போல இருக்கிற ஆம்பிளை பொம்பிளையள் எல்லாமாய் சேர்ந்து சனி ஞாயிறு என்றால் காணும் இவன்ரை வீட்டிலை தான் உள்ளையும் வெளியிலையும். சிவத்த கொடியுடனும் தொப்பியுடனும் .அதுகளின்ரை உடுப்பும் கோலமும் பார்க்க மாட்டியள் ,,எங்கடை அவையள் மாதிரி தான் ...என்று சொன்னவர் நிறுத்தி ...தம்பி எந்த ஊர் என்று கேட்டவர்  அவன் பதில் சொன்னதும்  எந்த பக்கம் என்றார்.உந்த கொடியை தொப்பியையும் கோசத்தையும் வைத்து வைத்து கொண்டு என்ன சீலைக்கு  என்ன மசிரை இங்கை  பிடுங்க போறாங்கள்.வேணமென்றால்  ஆபிரிக்காவிலோ ஆசியாவிலோ தென் அமெரிக்கா அந்த பக்கமாக போய் உங்கட நாட்டியத்தை பண்ணுங்கோவன் என்று சொல்லும் பொழுது மூலைக் கடை ஒன்றை வைத்து கொண்டு இந்த நாட்டு  பெரு முதலாளி போல    நினைத்து அச்சப் படும் மடமையை எண்ணி மனதில் சிரித்து கொண்டான்.


அவனின்ரை உழைப்பும் வேலையும் உதிலை போறவரின்ரை மாதிரியும் உங்களை மாதிரியும்  என்று வையுங்கோவன்.  ஆனால் அவனின்ரை மனிசி பெரிய வேலையும் மதிப்புக்குரிய பதவியுமாம்  அதுவும் இவனின்ரை இழுப்புக்கு இழுபடுறது மட்டுமல்லாமல் அதுவும் இவனை மாதிரிதான் கொள்கையோ கோதாரியோ அந்த பிடிப்பாம்.அவையளுக்கு அழகான சுட்டியான பத்து வயது சிறு பொம்பிளை பிள்ளை  அதுவும் எப்பவும் சிரித்து கொண்டு இங்கை வாழுற நல்ல வெள்ளையிளின்ரை பிள்ளையளோடை அதோ அந்த மேட்டிலுள்ள பள்ளிக்கு போட்டு திரும்பி போகும் பொழுது இந்த கடைக்கு வாறது ...இவன்ரை கோபத்தில் அதோடை கூட நான் நல்லாய் கதைக்கிறதில்லை ..அதைக்கூட விளங்காமாலோ  ஏற்றுக்கொண்டோ சிரித்து கொண்டு போகும் . அவன் அவரின் பக்கத்து கதையை சொன்னாலும்  ஒன்று மட்டும் விளங்கியது அவன் இன்றும் அன்றும் போல இருக்கிறான் என்பதை


அப்பப்போ விளையாடுவாள் அப்பப்போ படிப்பாள் .தன்னை மறந்து ஏதோ ஏதோ செய்வாள் .அப்ப எல்லாம் அவளது அப்பாவும் அம்மாவும் வாதிட்டு கொண்டு  இருப்பார்கள் . அது சண்டையா சச்சரவா அல்லது ஏதாவது தெளிவு பெற பேசுகிறார்களா என்பது பற்றி எல்லாம் அக்கறை காட்டுவதில்லை .அது பற்றி புரிதில் இல்லாத மாதிரிதான் பார்ப்பவர்களுக்கு இருக்கும் .அப்படித்தான் அவள் பெற்றோரும்  நம்பினார்கள்.  வீட்டில் சுவரில் அங்கிங்கு மாட்டி இருக்கும் இருக்கும் மீசைக்கார மாமாவினதும் சப்பைட்டை மூக்கு மாமாவினது படங்களும் தன்னோடை படிக்கும் தமிழ் பிள்ளையின் வீட்டில் மாட்டி இருக்கும் சுவாமி படங்களும்  ஒரே தன்மை கொண்டவை இல்லை என்று நல்லாய் தெரியும் .அவர்களின் பெயர் அவளுக்கு தெரியாது என  நினைத்தால் நீங்கள் தான் முட்டாள்கள்.

எப்போதும் அங்கு குதுகாலம் தான் பாடம் நடந்தால் என்ன நடக்காவிட்டலான்ன . அதுவுமொரு விசயம் ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடும் .எந்த வொரு மனகசப்பின்றி அநேக வெள்ளை இனத்து மாணவர்களில் இடையில்  நகர்ந்து செல்லும் அவளது அழகான  பள்ளி அனுபவங்கள்.அதுக்கு இவளின் கண்ணில் தெரியும் நட்புத்துவ மொழியும் எந்நேரம் முகத்தில் தெரியும் புன்னகை ஒளிப்பும் இவை எல்லாம் சேர்த்தாப்போல் இருக்கும் தன்னம்பிக்கையான தோற்றமும் காரணமும் என்று சொல்ல்க்கூடும் .ஆனால் தாயின் கருவில் இருக்கும் பொழுதில் இருந்து இன்று வரை சதா கேட்டு வந்த சமாச்சாரங்கள் ஆழ் மனதில் பதிந்ததும் காரணமாயிருக்கலாம் ..யார் கண்டார்கள்


அந்த பாடம் எடுக்கும் மிஸ்ஸை அவளுக்கு நல்லாய் பிடிப்பது போல எல்லாருக்கும் அப்படி பிடிக்கும்.  ஒரு அரவணைப்பு  எல்லாத்தையும் தாண்டிய நட்புத்துவமான உடலசைவுகளுடன் அந்த மிஸ் பாடம் நடத்தும் பொழுது அவளோடு ஜக்கியமாவர்கள் .அப்படித்தான் அன்று  இருதரப்பினரும் ஒன்றி பாடம் சுலபமாக நடந்தேறி கொண்டிருந்தது.அப்படி நிலமை மாறும் என்று அந்த மிஸ்ஸும் கண்டாளா அவர்களும் கண்டனரா ,,இல்லை அவளுமாய் அந்த கணத்துக்கு முந்தி கண்டாளா?

அவர் சர்வாதிகாரி ,,இவர் சர்வாதிகாரி ,,, இவரின் குணாம்சமென்ன  அவரின் குணாம்சமென்ன  அத்துடன் இன்னும் சேர்த்து அவரும் சர்வாதிகாரி இவரும் சர்வாதிகாரி என்றும் முடிக்கும் தறுவாயில் தான் புயலென கிளப்பி ஆக்கிரசோமாக மறுத்தாள் .ஏன் உனக்கு என்ன நடந்தது ? நல்லத்தானே இருந்தாய் ? ஏன்  அப்படி சொல்லுறாய் ? என்று மிஸ் ஆச்சரியத்துடன் கேட்டார். அவவுக்கு மட்டுமல்ல அந்த வகுப்பில் சக மாணவர்களுக்குமே ஆச்சரியமாகவே இருந்தது ..அவள் அப்படி ஒரு பொழுதும் நடந்து கொண்டதில்லை . மிஸ் திரும்பவும் விளங்க படுத்தினாள் ஏன் சர்வாதிகாரி என்று .இவர்களின் ஜனநாயகத்தின் அரத்தமோ..சர்வாதிகாரத்தின் அர்த்தமோ..,,தனது பெற்றோரிடம் இது பற்றி இருக்கும் அர்த்தமோ எதுவும் அறியாள் ....ஆனாலும்

ஒன்று மட்டும் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தாள் ...எனது அம்மா அப்பா மதிக்கும் இவர்கள்  ஒரு பொழுதும் சர்வாதிகாரியாக இருக்க மாட்டார்கள் என்று.எத்தனை தரம் மிஸ் தனது பாடத்திட்டத்தின் படி விளங்க படுத்தினாலும் ,,,அப்படியே நடந்து கொள்ள சக மாணவர்களும் அவள் சொல்லுவதை ஆமோதிப்பது போல இருந்தது.அழகாக அன்பாக நட்பாக நடந்து  கொண்ட மிஸ் சர்வாதிகாரி போல் ஆனாள்....அதிபர் அறைக்கு அனுப்பட்டாள் ..அங்கும்  அப்படியே  அவள் , அதிபரின்  மேல் உதட்டிற்க்கு மேல் சிறிய மீசை இல்லாத குறைதான் ஒன்று. அழைத்து வா  இங்கே அவர்களை ..என்று சொல்லுற மாதிரி  டெலிபோன் எண்களை அழுத்து பொழுது இருந்தது

உங்கள் கை தொலைபேசியை தயவு செய்து மெளனியுங்கள் என்ற  அந்த அறையில் ராஜன்,அதிபர் அந்த சின்ன சிட்டு மற்றும் அவளின் மிஸ்  பாடசாலை நேரம் இவ்வளவு  கடந்தும்  என்ன விவாதித்தார்கள் என்ன முடிவுக்கு வந்தார்கள் என்று தெரியாது.  அவர்கள் இவர்களை விளங்கி கொண்ட மாதிரி இவர்கள் அவர்களை இவர்கள் விளங்கி கொண்டிருக்கவேண்டும் என்றாலும் எல்லோரும் அதீத மெளனத்தோடை தான் வெளியேறீனார்கள்

ஒரே நம்பரில் வந்த பல தவறப்பட்ட அழைப்புகளில் ஒன்றை அழுத்தினான் ராஜன் .

மறுபுறத்தில் மூலைக் கடையில் அவரின் பேச்சை கேட்பதை நிறுத்தி ....அழைப்பை ஏற்று  எங்கை மச்சான் ...இவ்வளவு நேரம் என்றான்

மகள் பள்ளியில் தனது பங்குக்கு புரட்சி செய்திருக்கிறாள் .விவரம் தெரியாதவர்கள்.அதை.அடக்க துணைக்கு அவசரமாக என்னை கூப்பிட்டார்கள்..பிறகு அங்கை என்னை அடக்க பார்த்தாரகள் .உனக்கு தெரியும் தானே  எங்களை அடக்க முடியாது என்று  ..  அது தான் சாறிடா ....எல்லாம் நேரில் கதைப்பம் விரிவாக சொல்லுறன் என்றான்

ராஜன் இதைதான் செய்வான் என்று நன்கு தெரிந்து இருந்தும் அவனைப் பற்றிய கதையை  இவ்வளவு நேரமும் கேட்டது ஒரு டைம் பாசுக்கு தான் என்று அவருக்கு தெரியாது  ...
No comments:

Post a Comment