Wednesday, April 4, 2012

(சிறுகதை) சுருங்கிய தோலினுள் சுருங்காத எண்ண அலைகள்

என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று .

.இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர்  பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்கி கொண்டிருக்கவே ஒரு கூட்டம் எப்பவும் அந்த கோப்பிக் கடையில் இருக்கும். .அவர்களுக்கு என்று அந்த கடையில் உள்ள மூலையில் உள்ள கதிரை மேசைகளை உத்தியோக பூர்வமகா வழங்கபட்டிருக்காவிடினும் அதை தங்களுக்கென்று நிரந்தரமாக்கி வைத்திருப்பர் .அந்த இளைஞர் முதியவர் என்ற வேறுபாடின்றி இருக்கும் வெட்டி கூட்டத்தில் இருந்து கொண்டு மணியத்தார் வழமை போல எல்லவாற்றை கவனித்து கொண்டிருந்தார் .அந்த கோப்பிக்கடையின் வியாபாரத்தின் நாடி ஓட்டத்தை பொறுத்து இவர்களின் கூச்சலும் கும்மாளம் கூடி குறைந்து  இருக்கும் ...அந்த கூட்டத்தில் ஒருவராக அதிகம் நேரம் அங்கு பிரச்சனமாயிருந்தாலும் அதிகம் கதைக்க மாட்டார்.


...கதைத்தாலும் ஒரிரு வார்த்தைகள் தான் கதைப்பார் அதுவும் தங்களுடைய கூட்டதுக்கு தான் அதுவும் இதை மட்டும் தான் கூறி கொண்டே இருப்பார் ..இது ஊர் தேத்தணி கடைக்கு  முன்னாலுள்ள பெஞ்ச் இல்லையடாப்பா.. இது லண்டன் ..அவன்ரை வியாபாரத்தை பழுதாக்கமால் எங்கட அலுவலை பார்க்கோணும் ..
.பெரிசு ....சும்மா கிட  பேச மாட்டாய் ..பேசினால் எப்பவும் இதைத் தான் கீறல் றைக்கோட் பிளேயர் மாதிரித் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாய் ,,,,ஓனரே ,,பேசாமால் இருக்கிறான் ...அவனுக்கு நாங்கள் இருப்பதனால் வருவாயோ என்னவோ இதையே பதிலாக எப்பவும்  சொல்லும் நெட்டையனுக்கும் அங்கு வந்த கஸ்டமருக்கும் தேவையில்லாத கதை தொடங்கி எங்கையோ முடிந்து  பெரிய சண்டை வராமால் தடுப்பதே பெரும் பாடய் போய் விட்டது ஓனருக்கு ..

.அது தான் வேலையாளி மேல் காட்டுறார் என்று நினைத்த மணியத்தார் .அங்கு இருக்க பிடிக்காமல்.தனது மூன்றாம் காலான வாக்கிங் ஸ்ரிக்கையும் எடுத்து ஊன்றி க்கொண்டு மெல்ல மெல்ல வெளியே வந்தார். இவ்வளவு தூரம் இங்கு வந்தும் அவர்கள் போடும் சத்தம் தமிழில் கேடபதை உணர்ந்தார். அவர்கள் கறுவல் கூறிய விடயத்தை தான் இப்ப கதைக்கிறார்கள் விளங்கியது ..வழமையாக அவருக்கு காது அவ்வளவு கேட்காது .ஆனால் அதைத் தான் அவர்கள் கதைக்கிறார்கள் தெளிவாக உணர்ந்ததை பற்றி அவர் ஆச்சரிய படவில்லை .ஏனெனில் அவரது கால்களும் வாக்கிங் ஸ்ரிக்கும் ஒவ்வொரு அடியாக வைத்தாலும் அவரது மனமும் அதை நினைத்து தான் திரும்ப திரும்ப அசை போட்டு கொண்டிருந்தது!

அவர் எழுபதுகளின் அந்தியை அவர் தொட்டாலும் அந்த காலம் பேசிய கொள்கையின் நம்பிக்கைகளை இன்னும் நம்பிறன் நடக்கிறன் என்று நினைக்கிறார். நடை முறையில் அப்படி இல்லை என்பது தான் உண்மை. .இதை எல்லாம் ஒரு விசயமாக பொருட்டாக கருதி இன்னும் அதனுடன் போராடுவது வெறுப்பை தட்டியது .அவன் சொன்ன விடயம் அவர் வழமையாக குறுக்கு பாதையாக கை கொள்ளுகிற அந்த பார்க்கில் தான் நடந்ததாம்.

வரும் பொழுது இருந்த ரம்மிய மான சூழ்நிலை இப்பொழுது அங்கு இல்லையென்றாலும் வீட்டை போய் என்ன வெட்டி விழுத்த போறனோ? மருமகளின் வெறும் குத்தல் பேச்சுக்களை கேட்டு மன நோகிறதிலும் பார்க்க இதில் கொஞ்சம்இருப்போமே என காலாற அந்த பெஞ்சில் அமர்ந்தார்

உதிர்ந்த மரங்களில் இலைகள் மெல்லிதாக மலர தொடங்கும் அறிகுறியை காட்டி கொண்டிருந்தன.தூரத்தில் இருந்த கல்லறையில் ஏதோ அசுமாத்தம் ...சுற்று முற்றும் பார்த்து இந்த சூழலோடு ஒன்றி தேவையற்ற சிந்தனையை ஓடாமால் இருப்பதுக்கு முயன்றாலும் மனக் குதிரை தேவையில்லாமால் பின்னோக்கி தான் சவாரி செய்து கொண்டிருந்தது.இளவேனில் காலத்தின் ஆரம்பம் என்ன குதுகாலம் சந்தோசம் சிறுவர்கள் அதை வரவேற்பது போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள் ..ஒரு இளம் ஜோடி தங்களை மறந்த ஒரு உலகத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்

.இவருக்கு முன்னால் உள்ள பெஞ்சிலுள்ள கிழவி ஒருத்தி தூரத்தில் தெரியும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருந்தாள் ..அவளுடைய நாயோ தெரியாது தூரத்தில் ஓடுவதும் அவளுடைய காலடியில் வருவதுமாக இருந்து கொண்டிருந்தது.அதுக்கு கூட என்ன குதூகலாம் ..வயோதிபம் வரக்கூடாது ...வர முன் போயிடணும் ..அவருடைய ஆத்தா ...அந்த காலம் என்னை நேர காலத்துக்கு கொண்டு போய் சேர்த்திடு நல்லூரானே என்று வேண்டுவது சும்மா புலூடாவில்லை உண்மை தான் என்று நினைத்தார் ..இந்த தனிமை இந்த வேதனையுடன் மரணத்துக்கு காத்திருப்பதை தவிர வேற ஒன்றும் தான் செய்து கொண்டிருக்கவில்லையே ....அந்த உதிர்ந்த மரம் கூட மீண்டும் துளிர்க்கின்றது ..எனது சுருங்கிய தோலுகள் அப்பொழுது இருந்த இளமையுடன் இனிமேல் வருமா என நினைத்து இயற்கையின் ஓர வஞ்சனை நினைத்து திட்டிக்கொண்டார்

என்றும் சம்பந்த மில்லாமால் தனது மன ஓட்டங்கள் ஒரு கோவை இல்லமால் அங்கு இங்கு ஒடுவது போல் இருந்தது .முன்னிருந்த கிழவி அவரை பார்த்து உற்று பார்த்தது போல் இருந்தது .புன்னகை செய்த மாதிரி இருந்தது ..இவரும் பதிலுக்கு புன்னகைக்க முற்பட தீடிரென்று காட்சி மாறி அந்த கிழவி கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க அந்த நாய் அவளுடைய காலடிக்கு வருவதும் தூரத்தில் ஒடுவதுமாய் இருந்தது,தனது மன ஓட்டத்தில் பிழையா கிழவி தான் சும்மா தமாஸ் பண்ணுறாளா ..என்று தெரியாமால் தவித்தார்...

இந்த வயதில் அவள் செய்தால் என்ன செய்யாட்டி என்ன எனக்கு என்ன வரப் ப்போகுது என்று நினைத்து கொண்டிருக்கு பொழுது .அவள் மீண்டும் அவரை பார்த்த பொழுது அவளது அந்த கண்கள் மூக்கு அதரம் மேலுடம்பு இடுப்பு கால்கள் எல்லாம் முதுமை தோற்றத்தில் இருந்து இளமையாகி கொண்டிருந்தது ..இது என்ன சமிபாட்டு கோளாறா இப்படி தெரிவதுக்கு காரணம் அந்த கோப்பிக்கடை பலகாரமா  ஒரு கணம் நினைக்கும் பொழுது ..அவள்  இளமை த்தும்பிய சிரிப்புடன் அணுகி கொண்டிருந்தாள் .இவ்வளவு நேரமும் விளையாடிய நாய் ஒரு ஈனக்குரலில் குரைத்து கொண்டிருந்தது..தூரத்தில் தள்ளுவண்டிலில் சென்று கொண்டிருந்த குழந்தை இனம் புரியாத மழலை குரலில் வீறுட்டு சத்தம் போட்டு கொண்டிருந்தது ..அந்த கறுவல் இப்படி இதே மாதிரியான  சம்பவம் நடந்ததை சொல்லத் தானே கேலியும் கிண்டலுமாக கதைத்தோமே என அந்த சந்தர்ப்பத்திலும் கூட நினைக்க தவறவில்லை ,,,அவள் அவரை இன்னும் கிட்ட நெருங்கி கொண்டிருந்தாள் .

.மூச்சு முட்டுவது மாதிரி இருந்தது மேல் தோள்ப்பட்டை வலிப்பது மாதிரி இருந்தது ..இதுவெல்லாம் அவளை பார்த்து பயந்து அவருக்கு ஏற் படவில்லை என இன்னும் நம்பினார் ..ஏனெனில் அவளை மாதிரியே அவரும் இளமையாக தோலும் உடம்பு மாறி கொண்டிருப்பது தென்பட்டது .அது உண்மை தானாக நிச்சயப்படுத்துவதற்க்காக தன்னையும் அவளையும் மாறி மாறி விரைவாக பார்த்து கொண்டிருந்தார் தவிப்புடன் பார்க்க பார்க்க..பார்வை மங்கி கொண்டு சென்றது...ஒன்றுமே அவருக்கு இப்ப தெரியவில்லை வெளிப்புற சத்தங்கள் குறைந்து கொண்டு போய் கொண்டிருந்தது..


இப்பொழுது வெளிப்புற சத்தங்கள் மெல்லமாக கேட்டு கொஞ்சம் கூடி கேட்டு ஒரு இரைச்சலாக கேட்டு கொண்டிருந்தது..மெல்ல கஸ்டப்பட்டு கண்ணை திறக்க முற்பட்டார் முழுமையாக திறக்க முடியவில்லையானாலும்.சுற்றுவர ஆம்பிலன்ஸ் உதவியாளர்கள் நிற்பதை கண்டார் ....அந்த கிழவி தான் தொலை பேசி செய்து ..உதவியதாக உதவியாளர்கள் கூற அவளுக்கு ஒரு நன்றி சொல்லுவோமோ என நினைத்து பார்க்கு பொழுது

அவள் இன்னும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க கண்ட அவர் ..நடந்த சம்பவம் உண்மையா பொய்யா என இன்னும் தெளிவில்லாமால் தவித்தார்

...எதை நம்பவாட்டிலும் அதை மட்டுமாவது நம்பினார் ..ஹாட் அட்டாக் வந்தது அத்தருணத்தில் வந்தது உண்மை என...