Monday, May 10, 2010

ஒரு சனிக்கிழமை இரவில்(சிறுகதை)

நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து
ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும் கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும் என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல இந்த பரதேசி மோகன் ஊத்தி விட்டானே..அவன் ஊத்தினால் எனக்கு என்னுடைய மதி எங்கை போனது ?தமிழில் இப்படி உளறுவுதை கண்ட எனது முதுகு பிறகு பக்கமாக நின்ற வெள்ளை இனத்தவன் ஒன்று தனக்கு தான் ஏதோ ஒன்று சொல்லுறன் என்று நினைத்து வள் என்றோ வட் என்றோ ஏதோ சொல்லி என்னை பார்த்து முறுகினான் .

கிழமை முழுவதும் யந்திரமாய் சுழன்று வேலை செய்து வார கடைசி எப்ப வரும் என்று துடித்து காத்திருந்து குடித்து கும்மாளமடித்து களைப்பை இறக்கி செல்லும் இப்படியான கூட்டத்துடன் பயணம் செய்து கன காலம் ....அதனால் அவர்கள் போடும் எல்லா அட்டகாசமும் கூச்சலும் கும்மாளமும் இந்த வெறியில் கூட என்னால் சகிக்காமால் விலகி இருக்க இடம் தேடினேன் ..இந்த இரைச்சல்களின் ஒலியை மீறி கிழித்து ஒலித்து ஓய்ந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றது ரயில்..இறங்கினார்கள் ஏறினார்கள்..அப்போது அந்த பெட்டியின் மூலையில் இடம் காலியாக கண்டு யாரும் பிடித்து விடுவார்களோ என்று அவசரப்பட்டு ஒரு தவளை பாய்ச்சல் பாய்ந்து அந்த இடத்தில் இருந்து கொண்டேன்.

அந்த சீட்டுக்கு முன் சீட்டில் சாவகாசமாக அதுவும் இந்த நேரத்தில் கூட புத்தகம் வாசித்து கொண்டு எதேச்சையாக என்னை பார்த்து விட்டு தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தாள். ஒரு வெள்ளை இனத்து பெண்.அந்த ஒரு கணம் தான் இருக்கும் இருவரின் பார்வை சந்தித்து இருக்கும் ..ஆனால் எனக்கோ பல நாள் பழகிய பந்தம் மாதிரியான ஓர் உணர்வு. அவள் திரும்பவும் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. இந்த வெறி செய்யும் வேலையாக இருக்குமோ என்று நினைத்தேன்.சிலரை காரண காரியமில்லாமால் பிடித்து போவதுண்டு இடம் காலம் கூட பார்க்காமால் கூட.. எனது பார்வையின் அரவம் கண்டாளோ என்னவோ அல்லது தனது பாதுகாப்பை கருதியோ என்னவோ படிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒருதரும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தாள் ..எனக்கு சொல்லவா வேண்டும் .அவளது புன்னகை சிந்த முன் இதற்க்காக காத்திருந்தவன் போல நானும் விரைந்து புன்னகைத்து அதை ஏந்தினேன். நான் போகும் இடத்துக்கு செல்ல இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் ..அதுவரை இவள் இருப்பாளோ அதற்கு முன் இறங்குவளோ அப்படி இறங்காமால் இருந்தால் என்றால் ,பேச்சு கொடுத்து பார்த்தால் ,அவள் என்னுடன் பேசினால் ,அப்படி அப்படி நினைத்து கொண்டிருந்தால்...

ஹி ஹி ஹி... என்று நைந்த நக்கல் குரலுடன் சிரிப்பை கக்கி விட்டு தொடர்ந்தது அது . இரண்டு கழுதை வயது ஆகிவிட்டது உனக்கேன் உந்த புத்தி இப்படி போகுது என்றது...வேற யாருமில்லை எனது மனம் தான் ..உங்களுக்கும் கேட்காது முன்னுக்கு இருக்கும் அவளுக்கும் கேட்காது ஆனால் அது பேசுவது கதைப்பது சிரிப்பது கோபிப்பது எல்லாம் எனக்கு தெளிவாக கேட்கும்..இந்த மனம் சிலவேளை எனக்கு கதை சொல்லும் என்னுடன் சண்டை பிடிக்கும் செல்லம் குத்தும் ஆலோசனை கூறும் அபப்ப வரும் .அபப்ப வராது.சிலவேளை பொழுது போகாமால் இருக்கும் பொழுது இந்த மனம் வந்து என்னுடன் வந்து கதைக்காதோ என்று ஏங்குவேன் தேடினாலும் நான் விரும்பினாலும் காத்திருந்தாலும் கூட வராது .எங்கையோ சுத்தி திரியும் எங்கை போய்ட்டுது என்றுஎனக்கு கூட தெரியாமால் இருக்கும்...இந்த மனதின் ஒரு கெட்ட பழக்கம் நேரம் காலம் தெரியாமால் வந்து தொந்தரவு கொடுக்கும் ...கதை கேள் கேள் என்று சொல்லி..

உன் பாட்டில் என்ன பினாத்தி கொண்டு இருக்கிறாய் நல்ல ரசமான கதை சொல்லுகிறேன் கேட்கிறாயா என்றது... தனது சொந்த கற்பனையை வர்ணஜாலம் செய்து எழுதும் இலக்கியவாதிபோல் இட்டு கட்டி சொல்லும் கதை என்று நினைக்காதே ...நிசமாய் நடந்த உண்மை கதை ..உனக்கே கதையின் மாந்தர்கள் கூட ரொம்ப பழக்கமே என்றது மனம். சொல்லு சொல்லு என்று கெஞ்சி கொண்டு ஆவலுடன் இருப்பேன் என..நினைத்து தன் பாட்டில் கதை சொல்ல ஆயத்தமானது ...நிறுத்து நிறுத்து என்று வாய் விட்டே சத்தமே போட்டு விட்டேன் .அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மொழி விளங்கா விட்டாலும் இந்த ஓடும் ரயிலை நிறுத்தச் சொல்லி தான் சத்தம் போடுறான் என்று அனுமானித்து என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்களோ என்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கவில்லை .முன்னுக்கு இருக்கும் அவளும் ஒரு மாதிரி பார்த்தது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

மனதிடம் முரண்டு பிடிக்காமால் அமைதியாக அனுசரித்து கதையை வேற ஒரு நாள் பார்க்காலம் இப்ப என்னை விடு என்றேன் .உனக்கே அடுக்கமா இந்த சனிக்கிழைமை இரவில் அதுவும் அழகான வெள்ளை இன பெண்ணோடு ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது இப்பிடி குழப்பலாமா என்றேன்... இல்லை சொல்லுவேன் என்று சின்ன பிள்ளை மாதிரி சிணுங்கி மீண்டும் அடம் பிடித்தது ....இயலாத கடைசியில் கதையை சொல் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி வேட்டு எனது லீலைகளில் கவனமாக இருந்தேன்.
அது சொல்ல தொடங்கி விட்டது...மள மளவென..

அன்று நடந்த விளையாட்டு போட்டியில் எவ்வளவு சனம் ,,விளையாட்டும் அங்கங்கை நடந்து கொண்டு இருந்தது..ஆக்களும் அங்கங்கை கூடி கதைத்து , கூடி குடித்து ஞாபங்கள் மீட்டி கொண்டிருந்தனர் .இதிலை கடலை போட்டிருக்கின்ற இவனும் வந்திருந்தானே ..இவனுக்கு எங்கை அங்கை நடந்தது ஞாபகம் வரப்போகுது

..இப்ப இருக்கிறதிலும் பார்க்க நாலு மடங்கு குடியுடன் அல்லவா அன்று இருந்திருந்தான். இவனது குடி தான் ஊருக்கெல்லாம் தெரிஞ்ச மாதிரி தானே ..கி.மு கி.பி மாதிரி குடிக்கு முந்தி குடிக்கு பிந்தி என . குடிக்க முந்தி வர்க்கம் புரட்சி மசிர் மண்ணாங்கட்டி,புண்ணாக்கு என என்னனோவோ எல்லாம் கதைப்பான் ,கு.பி அவனது பேச்சு நடை பாவனை எல்லாம் எதிர்மாறாய் இருக்கும் ....இவனை பற்றியா சொல்ல வந்தது இல்லையே ..நான் சொல்ல வந்தது அன்று விளையாட்டு போட்டி வந்திருந்த இவனுடன் ஊரில் அந்த காலம் கூடி திரிந்த ராஜாவே பற்றி , அவனுக்கு என்ன என்று கேட்கிறியளா ..இவனுக்கு தான் நல்லா தெரியுமே அவனுடைய காதல் கதை ...அந்த பிற்சேர்க்கையான.இருபது வருடங்களுக்கு பின் நடந்த விசயத்தை ..இங்கு அந்த விளையாட்டு போட்டியில் நடந்த அதிசயத்தை.சொல்லத்தான் வந்தேன்..நான் கதை சொல்லுறன் கேட்காமால்.அங்கை பாருங்களேன் இவ்வளவு வெறியிலும் ...அந்த பெண்ணுடன் வழிந்து சரசம் குத்திக்கெண்டு இருப்பதை. என்றது மனது.

என்ன என்னைப் பற்றி வர்ண்ணை சொல்லி கொண்டிருக்கின்றாய் என்று இடைமறித்து கேட்டேன் , எனக்கும் அவளுக்கும் இந்த கணங்களில் நடக்கும் கதையில் இருக்கும் சுவாரசியம் உனது கதையில் இல்லையே என்றேன் ... அதற்க்கு மனது கதையின் முடிவுதான் சுவாராசியமானது ...அதுக்குள் அந்தரப்படுகிறியே என்றது .அப்படி என்ன சுவராசியம் நடந்தது என்று அலுத்து கொண்டு கேட்டேன் ..உனக்கு அவனது காதல் நிறைவேறாது போனது தெரியும் ..அந்த விளையாட்டு போட்டியில் இருபது வருடங்களுக்கு அவனும் அவளும் தற்செயலாய் திருப்ப சந்தித்து கதைத்ததால் ..இந்த .இருவரும் தங்களது கணவன் மனைவி பிள்ளை குட்டிகள் எல்லாவற்றை விட்டு துறந்து விட்டு இணைத்து விட்டார்களாம் ....எப்படி இருக்கிறது .....என்றது .மனது.

நல்லாயே இல்லேயே என்றேன் ...நீ ரசனையே இல்லாதவன் என்று அந்த காலம் அவனது காதலை நீ விமர்சிக்கும் போது அவன் சொன்னது சரி போலை என்றது நகைப்புடன்.

அவனைப்போல பைத்தியக்காரன் என்று நினைத்தானா என்னை?. .வேணுமென்றால் இதோ இவளிடம் கேட்டு பார் எனது ரசனையின் அளவுகோலை .என்றேன்.

அப்பதான் மனது . எனக்கும் அவளுக்கும் நெருக்கத்தை . பார்த்திருக்கும் போலை கோபத்தில் மறைந்து விட்டது

கூப்பிட்டு கூப்பிட்டு மனதை தேடினான் ... மனதை காணவில்லை .. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவை சொல்ல இந்த மனம் சாட்சிக்கு கூட இல்லாமால் மறைந்து விட்டதே

இப்பொழுது அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை இந்த ரயில் பெட்டியில்.

...ஒருவன் புல்லாங்குழலை இனிமையாக வாசித்து கொண்டிருந்தான் .. மிதந்து வந்து கொண்டிருந்தது.சிலர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர் ...சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர் ..ரயிலும் அந்த ஒலியையும் அரவணைத்து கொண்டு சென்று கொண்டிருந்தது .
.நானும் அவளும் அந்த மூலையில் ...

இந்த ரயில் இனிமேல் எங்குமே நிற்க கூடாது .வாழ் நாள் பூராவும் ஓடி கொண்டே இருக்கவேண்டும் என்று .நினைத்து கொண்டேன்

ஆனால் தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை கடைசி ஸ்டேசனில் சுத்த செய்பவன் தட்டி எழுப்ப தான் தெரிந்தது நான் தான் கடைசி பிரயாணி என்று ..
வெறி கூட முறிந்து விட்டது .. இந்த நிசியில் வீட்டுக்கு எப்படி போவது என்று தெரியவில்லையே ...புத்திசொல்ல மனம் கூட பக்கத்தில்லை இல்லையே...கோபித்து கொண்டு போய் விட்டதே என்ன செய்வது என்று தெரியாமால் விழித்து கொண்டிருந்தேன்.

தீடிரென்று மனம் தோன்றி இப்ப ஒரு கதை சொல்லுட்டுமா என்றது .. இந்த நேரத்தில் கதை கேட்க விரும்பமில்லை தான் ..மனம் முந்திய மாதிரி கோபித்து கொண்டு சென்று விடும் என்ற பயத்தில் சொல்லு என்று பவ்வியமாக கூறினேன்..

உன்க்கும் அவளும் இடையில் நடந்த கதையை தான் சொல்ல போறன் என்றது
மனம் சொல்லிக்கொண்டு வந்தது ..வெளியில் நல்ல பால் நிலா ..நானும் நடந்து வீடு செல்லும் வரையும் கேட்டு கொண்டு வந்தேன்....

No comments:

Post a Comment