Monday, February 8, 2010

அந்த நகரத்து அழகி(சிறுகதை)

‎அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபடுகிற மாதிரி வெட்கபட்டு கொண்டு,, வெளியில் அருவருத்து கொண்டு ஆனால் உள்ளுக்குள் ரசித்து கொண்டு செல்லுகின்றனர்.முனியப்பர் கோயிலுக்கு செல்லும் நடுத்தர பெண்கள் தீடிரென்று சினந்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி அவதானித்த பின்னர் அட இவளோ என்று சொல்லிக்கொண்டு செல்லுகின்றனர்.


அவளே தான் ,,,இவர்கள் ஒளித்து வைத்து ரசிக்கும் இவர்களால் ஊத்தை வார்த்தைகள் என்று வர்ணிக்கப்படுபவையை உதிர்த்து கொண்டிருப்பவள்,.அத்துடன் இந்த நகரத்தின் சிலரின் உபாதைகளையும் ஊத்தைகளையும் பெற்றுக்கொள்ளுபவளும்.அவளே. ஏதோ அவசரத்தில் ஏதோ நோக்கத்துக்காக சென்று கொண்டிருந்த அவளை.வழி மறித்து அந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு கிட்ட உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பதினாறே நிரம்பாத சில பொடியள் அவளை பார்த்து சல்லிக்கல்லு யனைவமே அப்பி என்று சிங்களம் தமிழும் கலந்த அந்த பாடல் வரிகளை பாடியதே அவளுக்கு வந்த கோபம். அதனால் வந்தது இந்த வார்த்தை ஜால சத்தம்.அரை குறையாக உதிர்க்கப்படும் யனவமே அப்பி என்ற சிங்கள வார்த்தைக்கு அர்த்தம் சரியாக அந்நகரத்து வாசிகளுக்கு தெரியுதோ இல்லையோ.சல்லிக்கல்லு என்று தமிழ் போல இருக்கும் அந்த சொல்லுக்கு அர்த்தம் அவர்கள் கொள்ளுவது வேறு மாதிரி.ஏன் என்று அவளுக்கு தான் முதல் தெரியுமே,..அதன் பின்னர் தானே மற்றவருக்கு தெரிந்திருக்கும்.அவளிடம் அவசரத்தில் இருட்டில் அனுபவிக்க போன ஒன்று.இவர் அனுபவிக்கும் அத்தருணத்தில் அவள் ஜடமாக இருந்து மள்ளாக்கொட்டை சாப்பிட்டு அதன் சுவையை ரசித்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த ஆத்திரத்தில் அவளிடம் சில்லறை காசாக உருவகபடுத்தி சல்லிக்கல்லுகளை கொடுத்து வந்திருக்கிறான்...அவளும் ஏமாந்திருக்கிறாள் அன்றிலிருந்து அவளுக்கு சல்லிக்கல்லு என்று பட்டம் முடிசூட்டப்பட்டு இப்பவும் தொடர்கிறது.

இந்த சல்லிக்கல்லு தேவைப்படுகிறது அங்குள்ள பெண்கள் தங்களை கண்ணகிகளாக உருவகபடுத்த..அப்படி ஒரு மாதிரி பெண்கள் அவர்களுக்கு தென்பட்டால் கூட சல்லிகல்லு என்று அழைக்க தொடங்க பார்ப்பார்கள்

கெக்கே போட்டு ரசித்த பொடியள் மீண்டும் ஒருமுறை அவளிடம் அதை எதிர்பார்த்து கூவ .அதை செவிசாய்க்க கூடிய எல்லை எல்லாத்தையும் தாண்டி சென்று விட்டாள்,.றீகல் தியேட்டர் அடியில் அடல்ஸ் ஒன்லி படத்தின் கட்அவுட்டை உள்ளே உள்ள படம் எப்படி இருக்கும் என்று மிகை கற்பனை பண்ணிக்கொண்டு ஆவென்று பார்த்து கொண்டிருந்தது. ஒன்று..நடக்கும் வேகத்தில் அதையும் சாடையாக இடித்து தள்ளிக்கொண்டு மூத்திர ஒழுங்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்தாள்.இந்த மூத்திர ஒழுங்கை கடைசி மட்டும் காவி பின் தாங்க மாட்டாமால் கடைசியில் ஒதுங்குபவர்களின் இடம்.இது. இந்த பகுதியிலிருந்து நகரத்து மைய பகுதிக்கு செல்லுவதுக்கு சுலபமான சேறும் சகதியும் நிரம்பி வழியும் குறுக்கும் பாதை.
அவளை கடந்து செல்லும் அந்த தோடம்பழ வியாபாரி கூட இவளை சுவைத்து இருப்பான் ,,அவனுக்கு கூட இவளின் அவசரம் கிராக்கிக்குத்தான் என்ற நினைப்பு.நெற்றியில் பட்டையும் சந்தனம் சவ்வாதுமாக ஒண்ணுக்கு ஒதுங்க இடம் தேடி கொண்டிருக்கிற பெட்டிக்கடை வைத்திருக்கின்ற அந்த பழசு கூட இவளிடம் சென்றிருப்பார்,அவரின் நினைப்பு கூட இவளின் அவசரம் கிராக்கியை தேடித்தான் என்று..அவளோ அவனின் நினைப்புடன் இந்த நகரமுழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்..அவனை நாலு நாளாக அவளின் கண்ணில் காண கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் தவிப்பை தண்டரோ போட்டு கூவியா சொல்லவா வேணும் அவர்களுக்கு..அவனின் நட்பு கிடைத்த பின் அதை விட்டு விட்டேன் அதையும் சேர்த்து சொல்லுவா வேண்டும் .இவர்களின் நினைப்பை எல்லாம் காவி நினைக்க அவளுக்கு இடமில்லை.ஏனெனில் .நினைப்பு முழுவதையும் அவனே பிடித்து விட்டான்.


நகரம் இவளது அவசரத்தின் வேகத்தை விட வேகமாக இப்ப இயங்க தொடங்கி விட்டது. அந்த பிரதான றோட்டில் இறங்கினவள் எந்த பக்கம் போவது என்று தனது மூளையை கசக்கி கொண்டு நின்றாள் .சிறிது அதில் நின்று நிதானித்து விட்டு ஆஸ்பத்திரி இருக்கும் தெரு பக்கமாக விறு விறுவென்று நடக்க தொடங்கி விட்டாள் .தெரு நடுபகுதியில் உள்ள மரங்களின் கீழ் மனிதர்கள் மட்டுமல்ல மினிவான் ,வாடகை கார்களும் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.கண்டக்டர்கள், வாகன ஓட்டனர்கள் அதில் சாவகசமாக நின்று கொண்டும் குந்தி கொண்டும் சிலர் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் சாய்ந்து கொண்டும் வாயடித்து கொண்டிருந்தார்கள் ..அதுக்குள் அவன் நிற்கிறானா என்று துளாவினாள். அவள் தேடும் அவன் அதுக்குள்ளும் சில நேரம் நிக்க கண்டிருக்கிறாள் இவன் அறிமுகம் கிடைக்க முந்தி.
அவளை பொறுத்தவரை அவளுக்கு இப்ப உலகத்தில் மிகவும் அழகன் அவன் தான்

.ஆனால் பரட்டை தலையுடன் பல நாள் பல்லு தீட்டாத காவி படர்ந்த பற்களுடனும் கிட்ட சென்றால் பல மாதம் உடம்பு கழுவதாதால் ஏற்படும் ஒருவித அழுக்கு வாசனையுடனும் அந்த கடை வாசல்களிலும் தெருக்களிலும் வலம் வரும் ஒருவன் தான் அவன்.அவனை பார்த்தால் ஒரு காட்டு மனிதனோ அல்லது ஆதிவாசி போன்று அமைந்த தோற்றம் ,,அவனது பற்கள் எப்பவுமே சிரித்தப்படி இருப்பது போல் தோற்றமளிக்கும் அதில் எப்பவுமே வீணி வடிந்தபடி..உண்மையில் அவன் எப்பவுமே சிரித்தபடி இருப்பது அல்ல ..அவனது உருவ அமைப்பே அப்படி இயற்கையில் அமைந்து விட்டது .அங்குள்ள கடை க்காரர் அதில் கூடி இருக்கும் சிலரிடம் எப்பவும் கேட்டு கொண்டிருப்பான்.இப்படி ,,அண்ணே ஒரு பணிசும் ஒரு டீயும் வாங்கி தாண்ணே .என்று அரியண்டம் கொடுத்து கெஞ்சி கொண்டு இருப்பான்..அதற்க்கு விலையாக பத்து மடங்கு பெறுமதியான வேலையை வாங்கி விடுவார்கள் .அவன் எந்த தொட்டாட்டி வேலை செய்து முடித்தாலும் அவனுக்கு அதிகம் கிடைக்கும் சம்பளம் பணிசும் டீயும் தான் .அவனுக்கும் அதுக்கு மேல் தேவை இருப்பது போல் தெரியவில்லை . தெரியவில்லையோ மேலும் தேவைகள் இருக்கு என்று தெரியாதோ என்னவோ தெரியாது.அப்படி யாரும் இல்லாத நேரங்களில் மூலையுள்ள கடை வாசலில் சாய்ந்து கொண்டு இருந்த படி போய் வரும் பெண்களை கண் வெட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் .

.அவனது தாமசத்தால் உருவாகிய இறுகிபோன உடல் உருவாகி இருந்தது. சில வேளை வேண்டுமென்றே தெரியாத மாதிரி தனது உடையை நழுவ விட்டு தனது அங்கங்களை தெரியதக்கதாய் விட்டு விட்டு இருப்பான் ..அதால் போகும் .பெண்கள் அருவருத்து திட்டி கொண்டு செல்லுவார்கள் ..அவர்கள் அருவருத்த மாதிரி தானே நடிக்க வேண்டும் ....சில வேளை ரசித்தும் இருக்காலாம் ஏனெனில் தையல்காரன் கவர்ச்சியாக தைக்கும் உடைகளிற்க்குள் ஒளிந்து கொண்டு கவர்ச்சி காட்டும் கோறை நெஞ்சு உடைய அவ்வூர் இளைஞர்களிலும் பார்க்க உண்மையிலையே இயற்கை கட்டமைப்பானவன்.

இந்த இடத்திலையும் இப்ப காணவில்லை என்ற போது நெஞ்சுக்குள் அவளுக்கு என்னவோ செய்தது .அவன் எங்கு போயிருப்பான் நகரத்தை விட்டு வெளியில் போக கூடியளவுக்கு அவனுக்கு தேவையுமில்லை ஆற்றலுமில்லை என்று பழகிய கொஞ்ச நாளில் அவளுக்கு நல்லா தெரியும்.

அவனை நினைத்து கலங்குவதுக்கு காரணம் காதல் என்ற கெட்ட வார்த்தையினால் என்று கடைசி வரையும் நினைக்கமாட்டாள். அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை..அதுக்காக அவள் விபச்சாரி தானே அவளுக்கு எங்கை தெரிய போகுது என்று நினைக்க கூடாது .இந்த பலராலும் பூசிக்கபடும் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நன்றாகவே தெரியும் .இவளை தாண்டி பள்ளிக்கு செல்லும் பெட்டைகள் பொடியளின் பகிடிகளுக்கு புன்னகை உதிர்த்து விட்டு அது காய முன்பு ..அங்காலையும் நிற்கும் பொடியளும் பகிடி விட அதற்க்கும் வழிய விட்டுட்டு செல்லுகிறார்கள்.

அந்த நாட்களில் அந்த கிராமத்து சந்தியில் காலை நேரம் களிப்பூட்டி கொண்டு இருக்க ஸ்கூல் பஸ்க்காக இவள் வரும் போது அந்த பிரதேசமே குளிர்மை கொண்டாடி கொண்டு இருக்கும்..அவளின் அசைவு அங்குள்ள கல்லூரி பெண்களில் இருந்து வித்தியாச படுத்தி கொண்டு இருக்கும் ..அது இயற்கை கொடுத்த வரம் ...அவளின் புன்னகை த்தும்பும் போல் இருக்கும் அப்பாவித்தானமான முகம் அங்கு இருப்பவர்களின் உணர்வுக்களுக்கு தக்க மாதிரி விடை கொடுத்து கொண்டு இருக்கும். அவ்வூர் வாசிகளை விட அவன் நவ நகாரிகமாக இருந்தான் அண்மை காலமாக தான் அவ்வூரில் தென் படுகிறான் ,இவள் பள்ளிக்கு வரும் நேரங்களில் அவனும் வழமையாக வருவதுண்டு .அவள் அங்கு பரப்பும் முழு புன்னகையையும் தனதாக்கி கொள்ள யோசித்தான் ..அதற்க்கு தனக்கு தெரிந்த சகல அஸ்திரங்கள் சகலவற்றையும் பிரயோகித்தான் ..
.

இரட்டை பின்னலில் வந்தால்என்னை விரும்புவதாக அர்த்தம் என்று சொல்லி தன்னிடம் உள்ள கடைசி அஸ்த்திரத்தையும் பாவித்து முடித்தான்

அடுத்த நாள் அந்த ஸ்கூல் பஸ் இரட்டை பின்னலுடன் சென்றது .அன்றிலிருந்து அவளுக்கு கசிறினோ பீச் காட்டினான் .. படத்தில் நாயகன் நாயகிக்கு நெருப்பூட்டி திரையில் சிவப்பாக்கா ..ராணி தியேட்டர் பொக்ஸ் றூமில் இருந்த படி சிவப்பு பச்சை எல்லாம் காட்டினான் அவன் கடைசி யில் இவளுக்கு சிவப்பு கொடி காட்டி விட்டு சென்று விட்டான்..ஆனால் காலம் செல்ல அவளுக்கு வயிறு காட்டியது ...அதனால் கிராமத்து சொந்தகளினால் தூக்கிய எறிப்பட்டவள் நகரத்தில் அலைந்தாள் அவனைத்தேடி ..ஆனால் நகரமோ அவளை இந்த தொழில் செய்யும் நரகத்தில் தள்ளியது.


அவள் ஸ்ரான்லி றோட்டில் தேடினால் அவன் நிற்க்கலாம் என்ற நப்பாசை அவளுக்கு ...மூட்டை தூக்கு தொழிலாளிகளுடன் நிற்க்க கண்டதாக நினைப்பு.

இடியும் மழையும் நகரத்தை உலுப்பி கொண்டிருக்க அவனும் அவளும் தற்சயலாக பாழடந்த கட்டிடத்தில் ஒதுங்கிய போது தான் அந்த நட்பு உருவாகியது .நகரமே நள்ளிரவில் நித்திரை வராமால் போராடி கொண்டிருக்க ..இழக்க ஏதும் அற்ற அந்த இருவரும் அந்த இரவை முதல் இரவாக்கி அங்கு ஒரு யோக நடனம் செய்த அன்றிலிருந்து பிறகு அவர்கள் பல முதல் இரவுகளை சந்தித்து இருந்தார்கள்.

அவள் அவனிடமிருந்து அந்த காலம் ஏமாற்றிய காதலினிடமோ அவள் ஈடுபட்ட பாலியல் உறவுகளிலிருந்து பெற்று கொள்ளாத புதிய அனுபவத்தை பெற்றாள்..அதற்க்கு என்ன பெயர் சொல்ல தெரியமால் தவித்தாள்

அந்த தவிப்பு அடங்காமால் தான் இன்னும் தவிப்புடன் அவனை தேடி கொண்டிருக்கிறாள். அவள் பத்திரிகை படிப்பவளல்ல ..அவளை கடந்து செல்லும் போய் வருவர்களின் முக அசைவுகளை படிப்பதன் மூலம் அங்கு ஏதோ நடக்க கூடாத விசயம் நடந்து விட்டது அவளுக்கு உணர்த்தியது.

அந்தி தேவன் கோப கணைகளை வீசி கொண்டிருந்தான் ..முனிசபல் விளக்குகள் மெல்ல மெல்ல எரிய தொடங்கி கொண்டிருந்தன ..அப்பொழுதும் அவனை தேடி கொண்டிருந்தாள் ..அந்த நகர தெருவில் ஈயை கூட காணவில்லை ..அவ்வூர் சன ங்கள் வீட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் பூட்டு பூட்டி பங்கருக்குள் இருப்பது மாதிரி இருந்து கொண்டு செய்தி கேட்டு கொண்டு இருந்தனர்.
பயம் கவ்விய உணர்வுடன் மறு நாள் காலை விடிந்தது..சனங்கள் மெல்ல மெல்ல குசு குசுத்து கொண்டு தெருவுக்கு இறங்கி தங்களுக்குள் கதைத்து கொள்ளுகிறார்கள்.
அங்கங்கை பிரேதம் கிடக்காம் உண்மை பொய் தெரியாது என்றது ஒன்று.
இரவு முழுவதும் பங்கருக்கிலை இருந்தது போல் இருந்து விட்டு வெளியில் வந்து ..ச்சாய் அவங்களாய் இருக்காது ..சும்மா ஆட்களாய் இருக்கும் என்று புறநானாற்று வீரம் கக்கியது.
அப்பொழுது சைக்கிளில் வந்த
பொடியன் ஒருவன் அவர்களை பார்த்து சொன்னான் ..இப்பத்தான் பார்த்துட்டு வாறன்.
முற்றவெளியிலை உண்மையாய் த்தான் என்று.. .
அவன் பிரேதமாக கிடந்து இருந்தான் என்று அவளுக்கு தெரியாது ..ஏனென்றால் அவளும் பிரதேமாக அவனருகில் கிடந்திருந்தாள்.